நடேஸ்வரா குளிர்கால ஒன்றுகூடல் – 2018

நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்

ஏழாவது வருடாந்த இராப்போசன விருந்து உபசாரம்

சென்ற சனிக்கிழமை 22-12-2018 காங்கேசன்துறை நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 7வது வருடாந்த இராப்போசன விருந்துபசாரம் ஸ்காபரோ லிற்ரில் வீதியில் உள்ள மல்வேன் குடும்ப நிலையத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கணக்காளரும் எழுத்தாளருமான குரு அரவிந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மாலை 6.40 மணிக்கு அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட திரு குரு அரவிந்தன் திருமதி மாலினி அரவிந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டவர்களும் மங்கள விளக்கை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து கனடிய தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, கல்லூரிக்கீதம் ஆகியன இடம் பெற்றன.

தமிழ்தாய் வாழ்த்தை மயூரதி தேவதாஸ் அவர்களும், கல்லூரிக்கீதத்தை வாசுகி கோகுலன், ரதி சாம்பவலிங்கம் அவர்களும் பாடினார்கள். அடுத்து இடம் பெற்ற ரதி சாம்பவலிங்கம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து மன்றத் தலைவர் மகாலிங்கம் குமாரகுலதேவன் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார். அதன்பின் பிரதம விருந்தினர் குரு அரவிந்தனின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் நடேஸ்வராக் கல்லூரி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறி, கல்லூரியின் வளர்ச்சிக்கு நாங்கள் உதவாவிட்டால் மீண்டும் கல்லூரியை மூடவேண்டிய நிலை விரைவில் உருவாகலாம் என்பதை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மேனுஷா ரகுவர்ணனின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து மயூரி தேவதாஸின் பாடல் ஒன்று இடம் பெற்றது. அடுத்து மேனுஷா ரகுவர்ணனின் சிறப்பு நடனத்தைத் தொடர்ந்து செந்தாமரை பிரதம

ஆசிரியரும், TET தொலைக்காட்சி உரிமையாளரும் சங்கத்தின் காப்பாளர்களில் ஒருவருமான ராஜி அரசரட்ணம் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் இரண்டு பிரிவாகக் கல்லூரி இயங்குவதைக் குறிப்பிட்டு, கல்லூரிக்கு எந்த வகையில் நாம் உதவலாம் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

அடுத்து மகாலிங்கம் குமாரகுலதேவன் அவர்களின் தலைமை உரையும், மார்க்கண்டு நிர்மலனின் உரையும் இடம்பெற்றன. கல்லூரி நிகழ்வுகள் பற்றியும் மற்றும் காளிகோயிலின் தற்போதைய நிலை பற்றியும் வீடியோ படங்கள் மூலம் இருவரும் விளக்கம் கொடுத்தார்கள்.

அடுத்து நடராஜா முரளிதரனை நடுவராகக் கொண்ட ‘சமூகத்திற்கு அதிகம் உதவுவது ஆத்திகமா அல்லது நாத்திகமா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குரு அரவிந்தன், மார்க்கண்டு நிர்மலன், செல்வரட்ணம் பிரபா, ரதி சாம்பவலிங்கம், சின்னையா விமலநாதன், கலைமகள் ரமேஷ் ஆகியோர் பங்கு பற்றினர். அதைத் தொடர்ந்து இராப்போசன விருந்து இடம் பெற்றது.

விருந்து உபசாரத்தைத் தொடர்ந்து சாய்ஈசன் பிரபாகரன் கீபோட்டில் பாடல்களை வாசித்தார். அடுத்து மேனுஷாவின் நடனம் தோழிகளுடன் இடம் பெற்றது. தொடர்ந்து மயூரதி தேவதாஸின் பாடலும், அதன் பின் செயலாளர் செல்வரட்ணம் பிரபாகரனின் நன்றி உரையும் இடம் பெற்றன. அதன் பின் சிறுவர்களுக்கான சங்கீதக் கதிரையும், பழைய மாணவர்கள் நினைவு பகிர்தலும் இடம் பெற்று நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. இந்த நிகழ்வுக்குத் திருமதி கோதை அமுதன், நடராஜா முரளிதரன் ஆகியோர் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகப் பணியாற்றினார்கள்.

Add Comment